ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம் 2

ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம் 2- அத்தியாயம் 1

பரீக்ஷித் கேட்ட ‘ச்ரோத்வ்யாதிஷு ய: பர:,’ கேட்கப்பட வேண்டியவைகளில் மிகவும் முக்கியமானது என்ன “ என்ற கேள்விக்கு சுகர் அதுதான் பாகவத புராணம் என்று பதிலளித்தார் .

சுகர் கூறியதாவது,
“ இந்த பாகவத புராணம் வேதத்திற்கு சமமானது. இதை கலியுகம் ஆரம்பிப்பதற்கு முன் த்வாபரயுகத்தில் என் தந்தையான வியாஸரிடமிருந்து அத்யயனம் செய்தேன்.

நிர்குண பிரம்மத்தில் நிலைத்த முனிவர்களும் ஹரியின் குணங்களைப் பேசுவதில் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே ஹரியின் கருணைக்குப் பாத்திரமான உங்களுக்கு நான் இதை அளிக்கிறேன்
.
கட்வாங்கன் தன் ஆயுள் ஒரு முஹுர்த்தத்தில் முடியப்போவதை அறிந்து சர்வசங்க பரித்யாகம் செய்து ஹரியை சரணமடைந்து முக்தியடைந்தான். உங்களுக்கு ஏழு நாட்கள் இருக்கின்றனவே. அதற்குள் பரலோக சித்திக்கான எல்லாவற்றையும் சம்பாதித்த்துக்கொள்ளும் “ என்றார்.

கட்வாங்கன் என்ற ராஜரிஷி தேவர்களுக்கு உதவியாக யுத்தம் செய்தபின் தன் ஆயுள் எதுவரை என்று கேட்க அதற்கு தேவர்கள் ஒரு முஹூர்த்தமே அவன் ஆயுள் என்று கூறினார். உடனே அவன் பூலோகம் திரும்பி ஹரியை சரணம் அடைந்தான். பரீக்ஷித்திற்கு தன்னால் முடியுமா என்ற சந்தேகம் வருமோ என்றெண்ணி சுகர் கட்வாங்கனைப்பற்றி கூறினார்.

( தேவலோகம் போக பூமி. பகவான் அருள் பெற பூலோகமாகிற கர்ம பூமிக்குத்தான் வரவேண்டும். இதனால் தான் சாபம் பெற்ற இந்திரன் முதலியோர் பூலோகத்திற்கு வந்த தவம் முதலியன செய்தார்கள். )

பிறகு சுகர் பரீக்ஷித்திற்கு என்னசெய்யவேண்டும் என்று உபதேசித்தார்

1.முடிவுகாலம் எய்தியபோது உடலிலும் உடல் சம்பந்தமான உறவிலும் பற்றை ஒழிக்க வேண்டும்.

2. துறவு பூண்டு வீட்டிலிருந்து வெளிக்கிளம்பி புண்ய தீர்த்தங்களில் நீராடி பரிசுத்தமான இடத்தில் ஆசனம் அமைத்து அமரவேண்டும்.

கீதையில் பகவான் இதை எவ்வாறு விளக்குகிறார் என்று பார்ப்போமா?

சுசௌ தேசே பிரதிஷ்டாப்ய ஸ்திரம் ஆஸனம் ஆத்மன:
நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜினகுசோத்தரம்.(ப.கீ. 6.11)

பரிசுத்தமான இடம், மிக உயரமும் மிகதாழ்வாகவும் இல்லாத ஸ்திரமான ஆஸனம் , தர்பைப்புல், அதன்மேல் தோல் அதன்மேல் துணி. இவ்வாறுள்ள ஆசனம்தான் சிறந்தது.

மிக உயரம் என்றால் மலை உச்சி போன்ற இடம் , கீழே விழும் அபாயம் உள்ளதாகையால் சரியல்ல. மிகவும் தாழ்வான பூமிக்கடியில் உள்ள இடமும் சரியல்ல. புழு, பூச்சி , நீர்ப்பெருக்கு இவைகளால் இடைஞ்சல் ஏற்படலாம். ஸ்திரமான ஆஸனம் பாதுகாப்பிற்கு. தர்பைப்புல் குத்தாமல் இருக்க தோல் , துணியால் மூடுவது தோலின் ரோமங்கள் இடையூறாக இல்லாமல் இருக்க. இவ்வாறு எப்படி பகவான் பக்தனின் நலத்தை நாடுகிறான் என்பது வியப்பைத் தருவது. .

3. மூன்று மாத்திரைகள் கொண்ட ஓம்காரத்தை மானசீகமாக ஜபம் செய்ய வேண்டும்.ப்ராணாயாமம் செய்து மனத்தை வசப்படுத்த வேண்டும்.

4. புத்தியே சாரதியாக குதிரைகள் போன்ற இந்த்ரியங்களை வெளி விஷயங்களில் போக விடாமல் இழுத்துப் பிடித்து மனதை பகவானுடைய மங்கள ரூபத்தில் நிலைபெறச்செய்ய வேண்டும். இது ப்ரத்யாஹாரம்.

5. ஒருமுகப்பட்ட மனதினால் பகவானின் திவ்யமங்கள ஸ்வரூபத்தில் லயிக்கச்செய்து, (தாரணா) ஏகாக்ர சித்தத்துடன் அவனையே நினைக்கவேண்டும். ( தியானம்). .மனம் இவ்வாறு அடங்கியதும் உண்டாகும் ஆனந்தமே ஸமாதி.

‘பதம் தத் பரமம் விஷ்ணோ: மனோ யத்ர ப்ரஸீததி.’ அதுதான் விஷ்ணுவின் பரமபதம்.

மேலும் சுகர் கூறியதாவது ,
இந்த ஸ்தூலப்ரபஞ்சம் பகவானின் ஸ்தூலரூபம். ப்ரம்மாண்டகோசம் எனப்படும் இதில் ஏழு ஆவரணங்களாவன, மஹத் என்னும் புத்தி, அஹம்காரம் , பஞ்ச பூதங்களின் சூக்ஷ்ம ரூபமான பஞ்ச தன்மாத்திரைகள்.

சுக்ர் பகவானின் விஸ்வரூபத்தை வர்ணித்துப் இந்த ரூபத்தையே யோகிகள் தியானிக்கின்றனர் என்றார். அடுத்த அத்தியாயத்தில் ஹ்ருதயத்தில் உள்ளதாக தியானிக்கும் திவ்யமங்கள அந்தர்யாமி ஸ்வரூபத்தை வர்ணிக்கிறார்.,

ஸ்ரீமத் பாகவதம்- ஸ்கந்தம்2 அத்தியாயம் 2

சுகர் கூறினார்.

கேசித் ஸ்வதேஹாந்தர்ஹ்ருத்யாவகாசே ப்ராதேசமாத்ரம் புருஷம் வஸந்தம்
சதுர்புஜம் கஞ்சரதாங்கசங்கம் கதாதரம் தாரணயா ஸ்மரந்தி.

சிலர் தம் தேகத்தினுள் ஹ்ருதயாகாசத்தில் வசிப்பவரை ஒரு சாண் அளவே உள்ளவராய் நான்கு புஜங்களுடன், தாமரை, சக்கரம், சங்கு கதை இவற்றோடு கூடிய புருஷனாக தியானம் செய்கிறார்கள்.

பரீட்சித்துக்கு உத்தரையின் கர்பத்தில் காட்சி அளித்த அதே உருவம், தேவகிக்கும் வசுதேவருக்கும் பிறந்த அந்த க்ஷணத்தில் காட்சி அளித்த உருவம்.

புன்னகையுடன் கூடிய தாமரைக்கண்கள், மஞ்சள் பட்டாடை, ஆபரணங்கள் கிரீடகுண்டலங்கள் , யோகிகளின் ஹ்ருதயத்தாமரையாகிய ஆலயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட துளிர் போன்ற மிருதுவான பாதங்கள், ஸ்ரீவத்சம் , கௌஸ்துபம், வனமாலை இவற்றோடு பொன்னாலும் மணியாலும் ஆன ஆபரணங்கள் அணிந்து கருத்து சுருண்ட மயிரிடை விளங்கும் அளவு கடந்த கருணயுடன் கூடிய சுந்தர முகம்.

இப்பேர்ப்பட்ட வடிவை மனக்கண்ணால் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
பிறகு பாதத்தில் இருந்து தொடங்கி ஒவ்வொரு அவயவத்தையும் தியானிக்க வேண்டும்.

யாவன்ன ஜாயேத பராவரே அஸ்மின் விச்வேச்வரே த்ரஷ்டரி பக்தியோக:
தாவத் ஸ்தவீய: புருஷஸ்ய ரூபம் கியாவஸானே பிரயத: ஸ்மரேத

உயர்ந்ததும் தாழ்ந்ததும் ( ஸகுணமும் நிர்குணமும்) அனைத்துலகும் அவரேயாகவும் ( பார்க்கபடுவது) அனைத்தையும் பார்ப்பவராகவும் உள்ள இவரிடத்தில் பக்தியோகம் எதுவரை உண்டாகவில்லையோ அதுவரை இந்த ஸ்தூல ரூபத்தை ஒழிவு நேரமெல்லாம் விடாமுயற்சியுடன் சிந்திக்க வேண்டும். ஒழிவு நேரம் என்பது நித்ய நைமித்திக கர்மங்களை முடித்த பின்னர் என்று அர்த்தம். உலக வ்யவஹாரங்களில் ஈடுபட்டு பகவானை நினைக்கவே நேரமில்லை என்போர்க்கு சொன்னது அன்று.

சுகர் பிறகு இருவகையான யோக மார்க்கங்களைப் பற்றி கூறுகிறார்.

1. விதேஹ முக்தி
தேசகால உணர்வை விட்டு மனம் புத்தியில் லயித்து புத்தி அஹம்காரத்தில் (நான் என்ற உணர்வு) லயிக்கிறது. தனி மனித அஹம்காரம் சமஷ்டி அஹம்காரத்தில் ஒடுங்குகிறது., நான் என்ற உணர்வு போய் அவன் என்ற உணர்வு).

அந்த நொடியில் உயிரை விடும் யோகியானவன் விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறான்.இது குண்டலினி யோகத்தின் மூலம் ஆறு சக்ரங்களான மூலாதாரம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞா, சஹஸ்ராரம் இவைகள் மூலம் அடையும் முக்தி.

2. க்ரம முக்தி
யோகியானவன் மனம், இந்த்ரியங்கள் இவைகளுடன் வெளிக்கிளம்பி அக்னி லோகத்தை அடைகிறான். இங்கு ஆசைகள் பஸ்மமாகி சிம்சுமாரம் எனக் கூறபப்டும் ஹரியின் சக்ரலோகத்தை அடைகிறான். இங்கு சூக்ஷ்ம உருவை அடைந்து மஹர்லோகத்தை அடைகிறான். அங்கு பிரம்ம உபாசகர்களுடன் சேர்கிறான்.

நைமித்திக பிரளயம் வரும்போது ஆதிசேஷனின் தீ நாக்குகள் மஹர்லோகம் வரை அழிக்க யோகியானவன் தபோலோகத்தை அடைந்து அதன் பின் பிரம்மஞானிகள் உள்ள பிரம்ம லோகத்தை அடைகிறான். இரண்டு பரார்தங்களின் முடிவில் பிரம்மாவுடன் கூட பிரம்மனிடம் ஐக்யமாகி முக்தியை அடைகிறான்.

முடிவில் சுகர் கூறியது என்னவென்றால் வாசுதேவரிடம் பக்தி உண்டாகுமேயானால் அதைவிட சிறந்த மார்க்கம் வேறு இல்லை.
ஆகையால் பகவான் ஹரியே எல்லா சமயங்களிலும் ஸ்ரவணம் கீர்த்தனம் தியானம் இவைகளுக்கு உரியவர்.

இது பரீக்ஷித்தின் கேள்வியான கேட்ட ‘ச்ரோத்வ்யாதிஷு ய: பர:,’ கேட்கப்பட வேண்டியவைகளில் மிகவும் முக்கியமானது என்ன,’ என்பதற்கு பதிலாக அமைந்துள்ளது. ச்ரோதவ்யாதிஷு , கேட்கப்பட வேண்டியவைகள் முதலியவை என்பதில் ச்ரவணம் , கீர்த்தனம், ஸ்மரணம் என்பவை அடக்கம்.

ஸ்ரீமத் பாகவதம்- ஸ்கந்தம்2 அத்தியாயம் 3

சுகர் எந்தெந்த பலனுக்காக எந்தெந்த தெய்வ ரூபத்தை உபாசிக்கவேண்டும் என்று கூறி பலனை விரும்பாவிட்டாலும் விரும்பினாலும் அல்லது மோக்ஷத்தையே விரும்பினாலும் உபாசிக்க வேண்டியது ஹரியையே என்று கூறுகிறார்.

அவர் கூறியதாவது,
வேத அறிவு பெற பிரம்மாவையும், இந்த்ரிய சுகம் பெற இந்திரனையும், பிள்ளைப் பேற்றுக்காக பிரஜாபதியையும், செல்வம் பெற ஸ்ரீதேவியையும், ஒளி பெற அக்னியையும், வலிமை பெற பதினொன்று ருத்ரர்களையும், , உணவுக்கு அதிதியையும், சுவர்க்கம் செல்ல பன்னிரண்டு ஆதித்யர்களையும், ராஜ்யத்திற்காக விச்வதேவர்களையும், பிரபலம் அடைய ஸாத்யர்களையும், தீர்காயுள் பெற அஸ்வினி தேவர்களையும், தேக பலம் பெற பூதேவியையும், அழகான உருவம் பெற கந்தர்வர்களையும், பெண் சுகத்திற்கு ஊர்வசியையும், சர்வாதிகாரம் பெற பிரம்மாவையும், வணங்க வேண்டும் என்று இவ்வாறு எல்லாவற்றையும் கூறிக் கடைசியில், கூறுகிறார்.

அகாம: ஸர்வகாமோ வா மோக்ஷகாம உதாரதீ:
தீவ்ரேண பக்தியோகேன யஜேத புருஷம் பரம்.

சிறந்த புத்தியுடையவன் (உதார தீ:) எதையும் விரும்பாதவன் ஆயினும் (அகாம: எல்லாவற்றையும் விரும்புவனாயினும் ( ஸர்வகாம:) அல்லது மோக்ஷ காம: , முக்தியையே விரும்பினாலும் தீவிரமான பக்தியோகத்தால் பரமபுருஷனாகிய ஹரியையே பூஜிக்க வேண்டும். பக்தி பாகவதர்களின் சேர்க்கையால் வருகிறது.

( எல்லா தேவர்களுடைய சக்தியும் அவனிடம் இருந்தே வந்தபடியால் அவனைபூஜித்தால் எல்லாமே கிடைத்து முடிவில் முக்தியும் கிடைத்து விடும். ராஜாவிடம் கேட்காமல் அவனுடைய அதிகாரிகளிடம் கேட்பானேன்.)

சௌனகர் கூறினார்.

பகவானின் நினைக்காத வாழ்க்கை வீண். மரம் செடிகொடிகளும், மிருகங்களும் கூட வாழ்கின்றன. வெறும் வாழ்க்கையால் ஆவதென்ன? மனிதனின் ஆயுள் சூரியன் உதயம் ஆகும்போதும் அஸ்தமனம் ஆகும்போதும் தினமும் குறைந்துகொண்டே வருகிறது. பகவானின் நாமம் கேளாத செவியால் பயன் என்ன. அவன் நாமத்தைக் கூறாத நாவு தவளையுடையதைப் போன்றது. அவன் உருவத்தைக் காணாத கண் மயில் தோகையில் உள்ள கண்போல. அவனை நினைந்து உருகாத நெஞ்சம் கல்

இவ்வாறு கூறிவிட்டு சௌனகர் சுகர் மேலும் கூறியதைப்பற்றி சொல்லும்படி சூதரைக் கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 2- அத்தியாயம் 4

அடுத்து பரீக்ஷித் சுகரை வினவினார்.
1.பகவான் தன் மாயையின் சக்தியால் எவ்வாறு இந்த பிரபஞ்சத்தை ஸ்ருஷ்டித்தார்?
2. ஒருவரான பகவான் எவ்வாறு தன் லீலையால் பலவாகத் தோன்றினார்?
3. எவ்வாறு பல அவதாரங்களை எடுத்தார்?

சுகர் அதற்கு பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன் பகவானை பலவாறு
துதித்தார்.

நம; பரஸ்மை புருஷாய பூயசே ஸதுத்பவ ஸ்தான நிரோதலீலயா
க்ருஹீதசக்தித்ரிதயாய தேஹினாம் அந்தர்பவாய அனுபலக்ஷ்யவர்த்மனே

தன் லீலையால் மூன்றுவிதமான சக்தியைக்கொண்டு சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் இவற்றை செய்பவரும், எல்லா தேகத்தின் உள்ளும் அந்தர்யாமியாக இருப்பவரும், காண முடியாத செய்கை உடையவரும் ஆன அந்த பரம புருஷனுக்கு நமஸ்காரம்.

பூயோ நம: ஸத்வ்ருஜினச்சிதே அஸதாம் அஸம்பவாய அகிலஸத்வமூர்த்தயே
பும்ஸாம் புன: பாரமஹம்ஸ்ய ஆச்ரமே வ்யவஸ்திதானாம் அனும்ருக்யதாசுஷே

நல்லோர்களின் பாபத்தை போக்குகின்றவரும், அல்லோர்களை சிக்ஷிக்கிறவரும், பல திவ்ய ரூபங்களை கொண்டவரும் , முற்றும் துறந்த முனிவருக்கு அருள் செய்பவரும் ஆனவரை மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.

யத்கீர்த்தனம் யத்ஸ்மரணம் யதீக்ஷணம் யத்வந்தனம் யத்ச்ரவணம் யதர்ஹணம்
லோகஸ்ய ஸத்யோ விதுநோதி கல்மஷம் தஸ்மை ஸுபத்ரஸ்ரவசே நமோநம:

யாருடைய கீர்த்தனம் , ஸ்மரணம் , தரிசனம், வந்தனம் செய்தல், ஸ்ரவணம் , பூஜை இவை உலகத்தில் உடனுக்குடனே பாபங்களை அழிக்கிறதோ அந்த பரமமங்கள கீர்த்தியுடைய பகவானுக்கு நமஸ்காரம்.

தபஸ்வின: தானபரா: யசஸ்வின:மனஸ்வின:மந்த்ரவித: ஸுமங்களா:
க்ஷேமம் ந விந்தந்தி வினா யதர்பணம் தஸ்மை ஸுபத்ரச்ரவசே நமோ நம:

தபஸ்விகள், வள்ளல்கள் , கீர்த்தியுடையோர் , யோகிகள், மந்த்ரம் அறிந்தவர்கள், மங்களமான சீலத்தை உடையோர், முதலியோர் யாருக்கு கர்மங்களை அர்ப்பணிக்காமல் முக்தியடைய முடியாதோ அந்த மங்களமான கீர்த்தியுடைய பகவானுக்கு நமஸ்காரம்.

ஸ்ரீய:பதி:யக்ஞபதி: பிரஜாபதி: தியாம் பதி: லோகபதி: தராபதி:
பதிர்கதிஸ்சாந்தகவ்ருஷ்ணிஸாத்வதாம் ப்ரஸீததாம் மே பகவான்
ஸதாம் பதி:

ஸ்ரீய;பதியும், யக்ஞத்தின் பலனை கொடுப்பவரும், எல்லா உயிர்களுக்கும் அதிபரும், ஸகல லோகத்திற்கும் பூமிக்கும் அதிபரும் , அந்தக வருஷ்ணி ஸாத்வத குலங்களின் ரக்ஷகராக கிருஷ்ணாவதாரம் செய்தவரோ , நல்ல ஹ்ருதயம் படைத்தவரின் கதியும் ஆன பகவான் என்னிடத்தில் கருணை புரியட்டும்.

யத்ங்க்ர்யனுத்யானஸமாதிதௌதயா தியானுபச்யந்திஹி தத்வம் ஆத்மன:
வதந்தி சைதத் கவயோ யதாருசம் ஸமே முகுந்தோ பகவான் ப்ரஸீததாம்

யாருடைய பாதத்தை தியானம் செய்வதன் மூலம் தெளிவுற்ற மதியினால் ஆத்ம ஞானத்தை அடைந்து ஞானிகள் அதை தம் திறமைக்கேற்ப உபதேசிக்கின்றார்களோ அந்த முகுந்தன் என்னிடத்தில் ப்ரீதி அடையட்டும்.

ப்ரசோதிதா யேன புரா ஸரஸ்வதீ விதன்வதாஜஸ்ய ஸதீம்ஸ்ம்ருதிம் ஹ்ருதி
ஸ்வலக்ஷணா ப்ராதுரபூத் கிலாஸ்யத: ஸ மே ரிஷீணாம் ரிஷப: ப்ரஸீததாம்

எவருடைய ஆக்ஞையால் வேத ஸ்வரூபமான சரஸ்வதி பிரம்மாவினுடைய முகத்தில் ஆவிர்பவித்து ஸ்ருஷ்டி செய்யும்படி தூண்டினாளோ அந்த ரிஷிகளுக்கு ரிஷியான பகவான் எனக்கு அருளட்டும்
.
பூதைர்மஹத்பிர்ய இமா: புரோ விபு: நிர்மாய சேதே
யதமூஷு பூருஷ:
புங்க்தே குணான் ஷோடசஷோடசாத்மக: ஸோஅலங்க்ருஷீஷ்ட
பகவான் வசாம்ஸி மே

பஞ்சபூதங்களால் ஆன இந்த உலகத்தை நிர்மாணித்து அதனுள் புகுந்து அந்தர்யாமியாய் பதினாறு குணங்களையும் செயல்களையும் நிர்வஹிக்கும் அந்த பகவான் என் வாக்கில் எழுந்தருளட்டும்.

( பஞ்ச பூதங்கள் பஞ்ச கர்மேந்த்ரியங்கள் பஞ்ச ஞானேந்த்ரியங்கள் , அந்த;கரணம் ஆக பதினாறு. அவைகளின் குணங்கள் , செயல்கள்.)

நமஸ்தஸ்மை பகவதே வாஸுதேவாய வேதசே
பபுர் ஞானமயம் சௌம்யா யன்முகாம்புருஹாஸவம்

எவர் முகத்தாமரையிலிரிந்து பெருகிய அம்ருதத்தை பக்தர்கள் பருகினார்களோ அந்த வேத வியாசரை நமஸ்கரிக்கிறேன்.,

இவ்வாறு துதி செய்த பின்னர் சுகர் மன்னரிடம் கூறினார்.

ஹரியானவர் தனக்கு எதை நேரில் உபதேசித்தாரோ அதை ஸ்வாயம்புவான பிரம்மா தன்னை நாடி வந்து வினவிய நாரதருக்கு உபதேசித்தார்.

அடுத்து .பகவான் தன் மாயையின் சக்தியால் எவ்வாறு இந்த பிரபஞ்சத்தை ஸ்ருஷ்டித்தார்? என்ற பரீட்சித்தின் கேள்விக்கு பதில் கூறப்படுகிறது.

ஸ்ரீமத்பாகவதம் – ஸ்கந்தம் 2 -அத்தியாயம் 5

பிரம்மாவிடம் நாரதர் கேட்ட கேள்வி
யத்ரூபம் யததிஷ்டானம் யத: ஸ்ருஷ்டம் இதம் பிரபோ
யத் ஸம்ஸ்த்தம் யத்பரம் யத் ச தத் தத்வம் வத தத்வத: (பா. 2.5.2)

“இந்த பிரபஞ்சத்தின் லக்ஷணம் என்ன? ஆதாரம் என்ன ? எவ்வாறு சிருஷ்டிக்கப்பட்டது? இதன் முடிவு என்ன ? எதை ஆச்ரயித்து இருக்கிறது? இதைப்பற்றிய உண்மையை எனக்குக் கூறுமாறு பிரார்த்திக்கிறேன்.”

மேலும் நாரதர் கூறியதாவது ,
முக்காலும் உணர்ந்த உங்களுக்கு இது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குகிறது. உங்கள் சங்கல்பத்தின் மூலமே சகலவிதமான சிருஷ்டியை செய்கிறீர்கள். ஒருசிலந்தியைப்போல் தங்களிடம் இருந்தே இந்தப்ரபஞ்சம் தோன்றியதாக அறிகிறேன்.

ஆனாலும் தாங்கள் தவம் செய்ததாக அறிகிறேன். இந்த ஞானம் யாரிடம் இருந்து பெற்றீர்கள்? உங்களுக்கு மேலிருக்கும் உங்களை இயக்கம் அந்த சக்தி யாது? இதை விளக்க வேண்டும்.

பிரம்மா கூறினார்.
எனக்கு மேல் என்னை இயக்கும் சக்தியான அந்த பகவானைப் பற்றி நான் கூறுவதைக் கேள்.
எவருடைய வெல்லுதற்கரிய மாயையால் எல்லோரும் என்னை சிருஷ்டிகர்த்தா என்று கூறுகிறார்களோ அந்த பகவானை த்யானிப்போமாக.
அவருடைய கண்பார்வை செல்லும் இடத்தில் நிற்பதற்கும் எந்த மாயை வெட்கப்படுகிறாளோ அவளால் மயக்கப்பட்ட மூடர்கள் ‘நான்’ ‘எனது’ என்று பிதற்றுகிறார்கள்.
வஸ்து, கர்மம் காலம் ஸ்வபாவம் . ஜீவன் இவை எல்லாவற்றிற்கும் பகவானே ஆதாரம்.

நாராயண பரா வேதா தேவா நாராயணாஞ்கஜா:
நாராயணபரா லோகா நாராயணபரா மகா:
நாராயணபரோ யோகோ நாராயணபரம் தப:
நாராயணபரம் ஞானம் நாராயணபராகதி: (பாக. 2.5.15-16)

வேதங்கள் நாராயணனைப பற்றியவை. தேவர்கள் நாராயணனின் அவயவங்களில் தோன்றியவர்கள். உலகங்கள் நாராயணனை ஆச்ரயித்தவை. யக்ஞங்கள் நாராயணனைக் குறித்தே.யோகம் நாராயணனை அடையவே . தவம் நாராயணனுக்கே அர்ப்பணம்.ஞானத்தின் நோக்கம் நாராயணனே. நாராயணனை அடைவதே பிறவியின் குறிக்கோள்.

நானும் அவரால் ஸ்ருஷ்டிக்கப்பட்டவ்னே. அவர் அருளால் சிருஷ்டியை மேற்கொள்ளுகிறேன். இவ்வாறு கூறிவிட்டு பிரம்மா பகவத்ஸ்ருஷ்டியை விளக்குகிறார்.

அதற்கு முன் பகவான் எதைக்கொண்டு இந்த உலகத்தை ஸ்ருஷ்டித்தார் எனற கேள்வி எழுகிறது.
ஒரு வஸ்துவை சிருஷ்டிக்க மூன்று காரணங்கள் தேவை. ஒன்று உபாதான காரணம். இரண்டு, நிமித்தகாரணம் . மூன்று ஸஹகாரி காரணம்.

ஒருபானை செய்வதற்கு களிமண் வேண்டும் . இது உபாதான காரணம். மண் மட்டும் இருந்தால் பானை வருமா? அதைச்செய்ய குயவன் வேண்டும். இது நிமித்த காரணம் . அதை குயவன் எப்படி செய்வான்? அதற்கு குயவனின் சக்கரம் வேண்டும் அல்லவா? இதுதான் ஸஹகாரி காரணம்.

இப்போது பகவான் எப்படி உலகை சிருஷ்டித்தார் என்று பார்த்தால், உபநிஷத் கூறுகிறது, ‘ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத்,’ (சாந்தோ. உப. 6.2.1) ஆதியில் ஸத் அதாவது பிரம்மம் ஒன்றுதான் இருந்தது. அதனால் பிரம்மம்தான் உபாதான காரணம். அப்படியானால் எதைக்கொண்டு எதன் உதவியால் உலக ஸ்ருஷ்டி ஏற்பட்டது? அதற்கு உபநிஷத் சொல்லும் பதில்,

‘தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய,’ அது சங்கல்பித்தது நான் பலவாக ஆவேன்.,அதனால் பிரம்மமே மூன்று காரணங்களாகவும் இருக்கிறது.
ஆனால் இது பிரம்மமே உலகமாக மாறிவிட்டது என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது. அப்படி அல்ல. மாயையினால் பிரம்மமே உலகாக தோற்றம் அளிக்கிறது.

இப்போது பிரம்மா கூறிய பகவானின் சிருஷ்டி ஏற்பட்ட விதத்தைப் பார்க்கலாம்.
சத்வம் ரஜஸ் தமஸ் இதி நிர்குணஸ்ய குணா: த்ரய:
ஸ்திதிஸர்கநிரோதேஷு க்ருஹீதா மாயயா விபோ:

நிர்குணன் ஆகிய பகவான் சத்வம் ரஜஸ் தமஸ் என்கிற பிரக்ருதியின் மூன்று குணங்களை மாயையால் தோற்றுவிக்கிறான். ஜீவன் ஈஸ்வரனுடைய மாயையினால் முக்குணங்களின் வசப்பட்டு சம்சாரத்தில் கட்டுப்படுகிறான். அவன் அருளால் இதை உணர்ந்தவர் மாயையிலிருந்து விடுபடுகிறார்கள்.

கீதையில் பகவான் கூறியது என்ன என்று பார்த்தால்,
த்ரிபிர்குணமயை: பாவை: ஏபி: சர்வம் இதம் ததம்
மோஹித: நாபிஜானாதி மாமேப்ய: பரம் அவ்யயம் (ப.கீ. 7.13)
இந்த பிரபஞ்சம் முக்குணமாகிற மாயையினால் மூடப்பட்டுள்ளது. அதன் வசப்பட்டோர் என்னை இதைக் கடந்தவனாக காண்கிறதில்லை.
தைவி ஹ்யேஷா குணமயி மம மாயா துரத்யயா
மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே(ப.கீ.7.14)
என்னுடைய முக்குணமான மாயை கடக்க முடியாதது. யார் என்னை சரண் அடைகிறார்களோ அவர்கள் மட்டுமே இதைக் கடக்கின்றனர்.
இதன் பின்னர் பிரம்மா சிருஷ்டியைப் பற்றி விரிவாகக் கூறுகிறார்.

பகவான் மாயையின் சக்தியால் பிரபஞ்சத்தை சிருஷ்டித்தார். மாயையிலிருந்து காலம், கர்மவாசனைகள் இவை தோன்றின. காலத்தினால் தூண்டப்பட்டு பகவானின் சங்கல்பத்தினால் மஹத் தத்வம் தோன்றியது. மஹத் தத்வம் என்பது மூன்று குணங்களின் சேர்க்கையால் உண்டாயிற்று. மஹத் அல்லது புத்தியிடம் இருந்து அஹம்காரம் ( நான் என்ற உணர்வு) உண்டாயிற்று.

சத்வகுண்த்தில் இருந்து ஏற்பட்ட அஹம்காரத்திலிருந்து பேத திருஷ்டி வருவதில்லை. இதில் தமஸ் கலக்கும்போதுதான் நான் , பிறர் என்ற உணர்வு வருகிறது.
அஹம்காரம் மூன்று குணங்களுக்கேற்ப மூன்றுவகைப்படும். ஸாத்விக அஹம்காரம் வைகாரிகம் அல்லது ஞான சக்தி. ராஜசிக அஹம்காரம் தைஜசிகம் அல்லது க்ரியா சக்தி. தாமச அஹம்காரம் த்ரவ்ய சக்தி. ( பஞ்ச பூதங்களின் சிருஷ்டி சக்தி)

தாமச அஹங்காரத்தில் இருந்து முதலில் ஆகாசம் தோன்றியது. இதன் குணம் சப்தம். ஆகாசத்தில் இருந்து வாயு தோன்றியது . சப்தத்துடன் இதன் விசேஷ குணமான ஸ்பரிசம் சேர்ந்தது வாயுவே பிராணசக்தி. வாயுவில் இருந்து உண்டானது தேஜஸ் அல்லது அக்னி.சப்தம் ஸ்பரிசம் இவற்றோடு இதன் விசேஷ குணமாவது ரூபம்.,அக்னியில் இருந்து நீர் தோன்றியது. இதற்கு இதன்விசேஷ குணமாகிய மணத்துடன் கூட மற்ற நான்கு குணங்களும் உண்டு
.
சாத்விக அஹம்காரத்தில் இருந்து மனஸ், அதன் அதிஷ்டான தேவதையான சந்திரன், பத்து இந்த்ரியங்களின் அதிஷ்டான தேவதைகள் இவை தோன்றின. ராஜச அஹம்காரத்தில் இருந்து பத்து இந்த்ரியங்கள் உண்டாயின. இவ்வாறு சிருஷ்டிக்கு தேவையான எல்லாம் தோன்றினபிறகும் அவை தனித்தனியாகவே இருந்தன. பிறகு பகவானின் சங்கல்பத்தால் அவை கலந்து சமஷ்டி ரூபம், தனித்தனிரூபம் இவை உண்டாயின. இதுதான பகவானின் விராட் ரூபம் .

புருஷ சூக்தத்தில் சொல்லியுள்ளபடி ,
ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்
ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அதய்திஷ்டத் தசாங்குலம்
புருஷ: – பரமபுருஷரானவர்
ஸஹஸ்ர சீர்ஷா- ஆயிரக்கணக்கான தலை
ஸஹஸ்ராக்ஷ: – ஆயிரக்கணக்கான கண்கள்
ஸஹஸ்ரபாத்- ஆயிரக்கணக்கான பாதங்கள்

இது ஒரு உருவகம் அன்றி உண்மை இல்லை. புருஷ: என்பது இறைவனைக் குறிக்கிறது. அவன் எங்கும் சர்வவ்யாபி என்பதையே இவ்வண்ணம் சித்தரிக்கப் படுகிறது. அகில உலகமும் அவன் உருவமே என்ற அர்த்தத்தில் ஆயிரம் தலைகள் கண்கள் இவை சொல்லப்படுகின்றன. சர்வம் பிரம்ம மயம் என்பதே இதன் பொருள்.

இதைத்தான் உபநிஷத் கூறுகிறது.’ தத் ஐக்ஷத பஹுச்யாம் பிரஜாயேய – பிரம்மம் சங்கல்பித்தது நான் பலவாக ஆவேன் என்று.

நாராயண பட்டத்ரி சிருஷ்டியைப்பற்றி கூறும்போது,
‘பேதை: தாம் பிரதிபிம்பத: விவிசிவான் ‘ மாயையினால் பிரதிபலிக்கப்பட்டு பலவாகத் தோன்றினான். என்கிறார்.

பகவானின் விஸ்வரூபம் வர்ணிக்கப்படுகிறது. பதினான்கு உலகங்களும் அவன் தேஹமாக ஞானிகள் காண்கிறார்கள். இடுப்புக்கு கீழ் ஏழும் இடுப்பிற்கு மேல் ஏழுமாக . இடுப்பு பூலோகம். நாபி புவர்லோகம் ,ஹ்ருதயம் ஸ்வர்லோகம், மார்பு மஹர்லோகம், ஜனலோகம் கழுத்து, தபோலோகம் இதழ்கள். தலை சத்யலோகம். இதற்கு மேல் பிரம்மலோகம் அலல்து வைகுண்டம் ஸ்ருஷ்டிக்குள் அடங்காதது. என்றும் உள்ளது.

இதே போல கீழ் லோகங்கள் பாதாளம் வரை. இதை வேறுவிதமாகவும் கூறுகின்றனர். பாதங்கள் பூலோகம், நாபி புவர்லோகம், தலை சத்ய லோகம்.
பகவானுடியி விஸ்வ ரூபம் மேலும் விவரமாக அடுத்த அத்தியாயத்தில் வர்ணிக்கப்படுகிறது.

ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 2. அத்தியாயம் 6 – Missing

ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 2. அத்தியாயம் 7

இந்த அத்தியாயத்தில் பிரம்மா பாகவதத்தை சுருக்கமாகக் கூறி பகவானின் அவதாரங்களைப் பற்றி கூறுகிறார்.
1. வராஹாவதாரம்
ஹிரண்யாக்ஷன் சமுத்திரத்தில் மறைத்த பூமியை வெளிக்கொணர்ந்து அவனை வதைத்தது வராஹாவதாரம். வராஹன் யக்ஞபுருஷன் என்று அறிகிறோம். இது வராஹாவதாரத்தைப் பற்றிய அத்தியாயத்தில் விரிவாக சொல்லப்படுகிறது.
2.சுஜன்யர்
ருசி பிரஜாபதிக்கும் ஆகூதிக்கும் ஜனித்த அவதாரம். தக்ஷிணாவை மணந்து சுயாமர் என்ற இரு தேவரை புதல்வராக பெற்றார். மூவுலகங்களின் துன்பங்களை நீக்கியதால் ஹரி என்றும் பெயர் கொண்டார். ஆர்த்திம்(கஷ்டங்களை) ஹரதி (போக்குவதால்) இதி ஹரி:
.3கபிலர்
கர்தம பிரஜாபதிக்கும் தேவஹூதிக்கும் பிறந்தவர் கபிலர்.
இந்த அவதாரம் பாகவதத்தில் விரிவாக பின்னர் கூறப்பட்டுள்ளது.
4.தத்தாத்ரேயர் –புத்திரபாக்கியத்தை வேண்டிய அத்ரி முனிவருக்கு தன்னையே புத்திரனாக தந்ததால் தத்தாத்ரேயன் என்ற பெயர். தத்த: ஸ: ஆத்ரேய: -தன்னையே அத்ரியின் புதல்வனாக(ஆத்ரேயனாக) ஆக்கிக்கொண்டவன்
5.குமாரர்- பிரம்மாவின் மனதில் இருந்து இடையறாத தவத்தினால் உதித்த சனக சனந்தன சனாதன சனத்குமாரர்கள், முந்தைய கல்பத்தில் பிரளயத்தினால் நசித்த ஞானத்தை உலகிற்கு அளித்த அவதாரம்.
6. நர நாராயணர்கள்
தக்ஷப்ரஜாப்தியின் மகளான மூர்த்திக்கும் . தர்ம ப்ரஜாபதிக்கும் பிறந்த இரட்டையர்கள். இவர்களின் சரிதம் பாகவதத்தில் பின்னர் விவரமாக வரும்.
7. ப்ருது.
துஷ்ட அரசனான வேனனின் அவயவங்களில் இருந்து தோன்றி அவனை நரகத்தில் புகாமல் காப்பாற்றியவர். ஆதலால் புத்திரன் என்னும் சொல்லுக்குப் பாத்திரமானவர். பசு வடிவத்தில் ஓடிய பூமியைக் கறந்து எல்லா இயற்கைச் செல்வங்களையும் வெளிக்கொணர்ந்தவர். அதனால் பூமிக்கு ப்ருத்வி என்ற பெயர் ஏற்பட்டது. இதுவும் பின்னால் விவரமாகக் கூறப்பட்டுள்ளது.
8.ரிஷபர் நாபிக்கு சுதேவியினிடத்தில் பிறந்தவர். உலகைத்துறந்து பரம்ஹம்ஸராக ஆனவர். விரிவான சரித்திரத்தை பாகவதத்தில் காணலாம்.
9. ஹயக்ரீவர்
பிரம்மா செய்த ஸத்ர யாகத்தில் தோன்றி யக்ஞஸ்வரூபமானவர். குதிரை முகம் கொண்டு தங்க மயமான சரீரத்துடன் , வேதமே சுவாசமாக,எல்லா தேவதைகளையும் தன்னுள் கொண்டவர்.ஞான்ச்வரூபம்,
10.மத்ஸ்யாவதாரம்
நன்கு தெரிந்த பத்து அவதாரங்களில் ஒன்று, விரிவாகப் பின்னால் காணலம்..
11.கூர்மம்
ஆமையாகி மாந்தர் மலையை சுமந்தவர் . மலையைக் கடையும்போது சுகமாக இருந்ததால் ஆனந்தமாக நித்திரை கொண்டவர். அம்ருதமதனம் மற்றும் கூர்மாவதாரம் பின்னர் வரும்.
12.நரசிம்மர்
சொல்லுக்கடங்கா இந்த அவதாரத்தைப்பற்றி விரிவாக பின்னர் கூறப்படும்.
13.ஹரிஸம்ஜனகர்
ஆதிமூலமே என்று அலறிய யானையைக் காக்க கருடன் மேல் வந்தவர். இதையும் பின்னர் விரிவாகக் காணலாம்.
14.வாமனாவதாரம்
அதிதியின் கடைசி புத்திரான வந்து மற்ற புத்திரர்களைக் காட்டிலும் வடிவிலும் மஹிமையிலும் மிக உயர்ந்து பலிக்கு அருளியவர். வாமனாவதாரம் இரு அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ளது .
15. ஹம்சாதாரம்.
ஹம்சமாக வந்து முனிவர்களுக்கு யோகம், ஞானம், ஆத்மதத்வம், பாகவத தர்மம் முதலியவைகளை உபதேசித்தவர்.
16.தன்வந்தரி
தீர்க்கமுடியாத் நோய்வாய்ப்பட்டவரும் இந்த நாமத்தை உச்சரித்தாலே நலம் பெறுவார். ஆயுர்வேதம் என்ற வேதப்பகுதியை அசுரர் கவர்ந்து செல்ல அதை மீட்டு உலகுக்களித்தவர் .
17.பரசுராமர்
ஜமதக்னியின் புதல்வராகப் பிறந்து அதர்ம வழியில் சென்ற க்ஷத்ரியர்களை 21 முறை வெறுத்தவர். பின்னர் ராமனை சந்தித்து தன் அவதார சக்தியை முடித்துக்கொண்டவர். .
18.ராமாவதாரம்
பரசுராம ராம அவதாரங்கள் பாக்வதத்தில் சுருக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றன. .
19.கிருஷ்ணாவதாரம்.
தன்னில் ஒருபகுதியான பலராமனுடன் வாசுதேவனாக அவதரித்தவர். இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணாவதாரத்தைப் பற்றி மட்டுமே பத்து ஸ்லோகங்கள். இதில் கிருஷ்ணாவதாரம் முழுதும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. பாகவதத்தில் கிருஷ்ணாவதாரத்தை வர்ணிக்கும் தசம ஸ்கந்தம் மற்ற எல்லா ஸ்கந்தங்களை விட மிகப்பெரியது.
20.வியாசர்
வேதங்களை அறிய முடியாமல் மக்கள் அறிவுக் குறைவினாலும் ஆயுள் குறைவினாலும் ஆகியதைக் கண்டு வியாசர் உருவில் வேதங்களைப பிரித்து யாவரும் பயனடையுமாறு செய்தார்.
21.புத்தர்
கலியுகத்தில் வேதமார்கத்தை சரிவர பின்பற்றாமல் மாறுபட்ட வழிகளில் செல்வதைக்கண்டு அவர்கள் மனதை மாயையினால் கவர்ந்து வேதங்களை அதர்ம மார்கத்தில் உபயோகிக்காமல் செய்தவர்.
22.கல்கி
கலி முற்றி வேதம் அழிந்து போக கூடிய நிலையில் செய்யப்போகும் அவதாரம்.
இந்த 23 அவதாரங்களுடன் மோகினி அவதாரமும் சேர்ந்து இருபத்து நான்காக ஸ்கந்தம் 1 அத்தியாயம் 3 இல் கூறப்பட்டுள்ளது.

.இதைத்தவிர பகவான் , பிரம்மா, ரிஷிகள், ப்ரஜாபதிகள் மனுக்கள் இவர்கள ரூபத்தில் அவதரிக்கிறார். உண்மையில் இந்த பிரபஞ்சம் முழுதும் அவர் அவதாரங்களே. கீதையில் அவரே சொன்னது போல , “நாந்தோஸ்தி மம திவ்யானாம் விபூதீனாம், “ ( ப.கீ. 1௦.40) அவர் எடுத்த ரூபங்கள் கணக்கிலடங்காது.,

ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனாலும் அவர் மஹிமையை வர்ணிக்க இயலாது என்று கூறிய பிரம்மா இது பகவானாலேயே உபதேசிக்கப்பட்டது என்றும் கூறி நாரதரை உலகில் பக்தியை பரப்பும் பொருட்டு இந்த பாகவதத்தை விரிவுபடுத்தும்படி கூறினார்.

ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 2 அத்தியாயம் 8

அத்தியாயம் 8

பரீக்ஷித் கூறினார்.
“உலகப்பற்றை ஒழித்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடத்தில் மனதை செலுத்தி எவ்வாறு உடலை விடுவேனோ அவ்வாறு உபதேசித்தருள வேண்டும்.

இடைவிடாது ஸ்ரத்தையுடன் யார் பகவானுடைய லீலைகளை சரவணம் கீர்த்தனம் இவை மூலம் வழிபடுகிறார்களோ அவர்கள் இதயத்தில் அவர் விரைவில் பிரவேசிக்கின்றார். இதயத்தாமரையில் பிரவேசித்து உள்ளத்து மாசுகளை எல்லாம் சரத் ருது தாமரைத்தடாகத்தில் உள்ள நீரின் அழுக்கையெல்லாம் சுத்தப்படுத்துவதைப்போல நீக்கி விடுகிறார்.”

இதன் பொருள் என்னவென்றால் இதயம் அல்லது மனம் இருப்பது இறைவன் அருளாகிய தாமரைத்தடாகம். அதில் உள்ள நீரே நம் எண்ணங்கள். அதில் அனாதிகர்ம வாசனையினால் பல ஜன்மத்து அழுக்குப்படிந்து சேறாகி இருக்கிறது. இறைஉணர்வு உள்ளே புகுந்து விட்டால் எண்ணங்கள் தூய்மை பெறுகின்றன.

பரீக்ஷித் மேலும் கூறியதாவது,
தௌதாத்மா புருஷ: கிருஷ்ணபாத மூலம் ந முஞ்சதி.
முக்த ஸர்வ பரிக்லேச: பாந்த: ஸ்வசரணம் யதா
அவ்வாறு தூய்மையான உள்ளம் கொண்ட மனிதன் கிருஷ்ணரின் பாதத்தை அடைந்து கடினமான பயணத்திற்குப்பின் தன் இருப்பிடத்தை அடைந்த பயணியைப்போல் ஓய்வடைகிறான். ‘

அதற்குப்பிறகு பரீக்ஷித் இருபது கேள்விகள் கேட்கிறார். அதற்கு பதிலாக அமைந்ததே பாகவத புராணம்.அவைகளாவன,

1. ஆத்மாவுக்கு சரீரசம்பந்தம் எவ்வாறு ஏற்பட்டது? இதற்குக் காரணம் உண்டா இல்லை யதேச்சையாக ஏற்பட்டதா?

2. விஸ்வரூபத்தில் பகவானுக்கு எந்தெந்த அவயவங்கள் வர்ணிக்கப்பட்டனவோ அவை எல்லாமே மனிதருக்கும் உள்ளன . இதற்கு என்ன பொருள்?

3.பிரம்மா பகவானின் நாபிக்கமலத்தில் இருந்து தோன்றி ஜீவராசிகளை சிருஷ்டித்தார் என்றால் அவை பகவானுக்கு வேறுபட்டவையா?

4. மாயையின் சக்தியைக்கொண்டு சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் இவைகளை செய்து அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாக உள்ள பகவான் எவ்வாறு அந்த மாயையைக் கடந்து உள்ளார்?

5. உலகங்கள் , தேவர்கள் எல்லாம் அவருடைய அவயவங்களில் இருந்து தோன்றினர் என்றும் , உலகங்களும் தேவர்களுமே அவருடைய அவயவங்கள் என்றும் மாறுபட்ட கருத்து நிலவிகின்றது. இதில் எது சரியானது?

6.கல்பம், விகல்பம், இவைகளின் கால அளவுகள் என்ன.? காலம் என்பது இறந்த காலம் , நிகழ் காலம், வரும் காலம் என்று எவ்வாறு வகுக்கப்படுகிறது? பிரம்மா தேவர்கள் இவர்களுடைய ஆயுள் எவ்வளவு காலங்கள் அடங்கியது/

7. வினாடி , வருஷம் முதலிய சிறிய , பெரிய காலத்தின் பேதங்கள் எப்படிப்பட்டவை?

8. எந்த விதமான கர்மங்களின் மூலம் எந்த பிறவியையும் உலகங்களையும் ஜீவன் அடைகிறான்?

9. பூமி , பாதாளம், திக்குகள் ஆகாசம், க்ரஹங்கள் , நக்ஷத்ரங்கள், நதிகள், மலைகள் சமுத்ரங்கள் இவைகளைப பற்றியும் அங்கு வசிக்கும் பிராணிகளின் உறபததியையும் பற்றி சொல்ல வேண்டும்.

1௦.அண்டகோசத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள அளவுகளை பற்றியும், மகாபுருஷர்களின் சரிதங்கள், வர்ணாஸ்ரம தர்மங்கள் இவைகளைப் பற்றியும் கூறவேண்டும்.,

11. பகவானின் அவதார லீலைகள், யுகங்கள் யுகதர்மங்கள் இவை பற்றி விளக்க வேண்டும்.

12.ஸாதாரண தர்மங்கள், விசேஷ தர்மங்கள்,ராஜதர்மங்கள் , ஆபத்தர்மங்கள் இவைகளைப் பற்றி கேட்க விரும்புகிறேன்.

13. ப்ரகருதி, மஹத் முதலிய தத்துவங்கள், அதன் பரிணாம வளர்ச்சி இவை பற்றியும்

14.பகவானை ஆராதிக்கும் முறை, அஷ்டாங்கயோகம் இவைகளைப் பற்றியும்,

15. யோகம் மூலம் அணிமாதி சித்தி அடைந்து லிங்க சரீரத்தின் மூலம் லயம் அடைவது,இவைகளையும்,

16. வேதம், ஸ்ம்ருதி, தர்ம சாஸ்திரம், இதிகாசம் ,புராணம் இவைகளின் ஸ்வ்ரூபத்தையும் விளக்க வேண்டும்.

17. பிராணிகளின் சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் எவ்வாறு நிகழ்கிறது?

18. வேதத்தில் கூறிய இஷ்டபூர்த்திக்குரிய கர்மங்கள், முதல் மூன்று புருஷார்த்தங்கள் இவைகளைப் பற்றிக் கூறியருள வேண்டும்.

19. ஜீவர்களின் உற்பத்தி, பாஷண்ட மதங்களின் தோற்றம், ஆத்மாவின் பந்தமோக்ஷம், ஆத்மாவில் லயிப்பு இவை பற்றியும்,

20.. ஸ்வதந்த்ரராகிய பகவான் தன் மாயையினால் விளையாடுவதையும் பின்னர் அதை விட்டு விலகி சாக்ஷிபூதராக இருப்பதும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்,..

அந்த சாதுக்களின் கூட்டத்தில் இவ்விதம் பரீக்ஷித்தால் பிரார்த்திக்கப்பட்ட சுகபிரம்ம ரிஷியானவர், மிக ப்ரீதியடைந்தவராய், பகவானால் பிரம்ம கல்பத்தின் ஆரம்பத்தில் பிரம்மாவுக்கு கூறப்பட்ட வேதத்திற்கு ஒப்பான எல்லா கேள்விகளுக்கும் விடையாய் அமைந்த பாகவத புராணத்தை சொல்லலானார்.

ஸ்ரீமத் பாகவதம்-ஸ்கந்தம்2 அத்தியாயம் 9

பிரம்மா உலகை சிருஷ்டிக்க நினைத்தபோது அதை எவ்வாறு செய்வது என்று அறியவில்லை. அப்போது ஒரு அசரீரி ‘தப ,’தப,’ என்று கேட்க பிரம்மா ஆயிரம் வருடங்கள் தவம் செய்தார். தவத்தின் முடிவில் பகவான் பரத்யக்ஷமாகையில் ப்ரம்மாவின் கண்முன் பரமபதமாகிய வைகுண்டம் விரிந்தது.அங்கு அவர் கண்ட காட்சியை சுகர் விவரிக்கிறார்.

தஸ்மை ஸ்வலோகம் பகவான் ஸபாஜித:ஸம்தர்சயாமாஸ பரம் ந யத் பரம்
வ்யபேத ஸம்க்லேச விமோஹ ஸாத்வஸம்
ஸ்வத்ருஷ்டவத்பி: விபுதை: அபிஷ்டுதம்

இவ்வாறு பிரம்மாவால் ப்ரீதிசெய்யப்பட்ட பகவான் எதற்கு மேல் உயர்ந்த இடம் இல்லையோ, எங்கு பாபங்கள், அறியாமை , பயம் இவை இல்லையோ, எது பக்தர்களால் விரும்பி துதிக்கப் படுகிறதோ அந்த அவருடைய இடமாகிற வைகுண்டத்தை காட்டி அருளினார்.

ப்ரவர்த்ததே யத்ர ரஜஸ்தமஸ்தயோ: ஸத்வம் ச மிஸ்ரம் ந ச காலவிக்ரம:
ந யத்ர மாயா ,கிமுதாபரே ஹரே: அனுவ்ருதா யத்ர ஸுராஸுரார்சிதா:

அங்கு ரஜஸ் தமஸ் அல்லது இவற்றுடன கலந்த ஸத்வமோ இல்லை. சுத்த சத்வமே இருப்பதால். ஆங்கு உள்ள பகவானுடைய பரிவாரங்கள் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படுகிறார்கள்.

அங்கு உள்ளோர் எல்லாரும் நீல நிறத்துடனும் பீதாம்பரத்துடனும் தாமரைக்கண்களுடனும் காணப்பட்டனர்.

கற்பனைக்கெட்டாத சௌந்தர்யத்துடன் ஸ்ரீதேவி பகவானின் பாதபூஜை செய்ய அவருடைய பரிவாரங்களான ஸுனந்தன், நந்தன் பிரபலன், அர்ஹணன் முதல்யவர்கள் புடை சூழ , அரியாசனத்தில் அமர்ந்து கிரீட குண்டலங்களுடன் கமலக்கண்கள் அழகுற மந்தகாசத்துடன் கூடிய வதனத்துடன் பீதாம்பரம் நான்கு புஜங்கள் சங்கு சக்ரம் இவற்றோடு ஹ்ருதயத்தில் ஸ்ரீயுடன் காட்சி அளித்த பகவானைக் கண்டார் பிரம்மா.

பிரகிருதி முதலிய இருபத்து ஐந்து ஸ்ருஷ்டி தத்துவங்கள் , பகவான் என்ற பெயருக்கேற்ப ஆறு குணங்கள் இவைகளுடன் அவைகளைக் கடந்த மகிமை கொண்ட பகவானைக் கண்ட பிரம்மா உவகை மேலிட்டு மெய் சிலிர்க்க தண்டனிட்டார்.

பிரம்மா தன்னைக் கைப்பிடித்து அன்புடன் வினவிய பகவானிடம் கூறலானார்.
“ தாங்கள் சர்வவ்யாபியாயும் அந்தர்யாமியாயும் உள்ளவர். அதனால் எல்லோருடைய உள்ளக்கிடக்கையும் அறிந்தவர். என்னுடைய பிரார்த்தனைக்கு செவிசாய்க்க வேண்டும்.

.,ஒரு சிலந்தி தன் வலையை தனக்குள்ளே இருந்து வெளிக்கொணர்ந்து பிறகு இழுத்துக்கொள்வதைப்போல உங்களுடைய மாயையினால் இந்த உலகத்தை சிருஷ்டித்து காத்துப பிறகு தன்னுள்ளே ஒடுங்க வைக்கிறீர்கள்.

இதை எனக்குப் புரிய வைக்க வேண்டுமாறு கோருகிறேன். உங்களால் கற்பிக்கப்பட்டு நான் சிருஷ்டியை முழு கவனத்துடனும் பந்தத்திற்கு உட்படாமலும் உங்கள் சேவகனாகச் செய்வேன். எனக்கு அகந்தை ஏற்படாமலிருக்க அருள் செய்ய வேண்டும்.

பிறகு பகவான் அவருக்கு தத்வஞானத்தை உபதேசித்துப பிறகு கூறினார்.
அஹமேவ ஆஸம் ஏவ அக்ரே நான்யத் யத் ஸதஸத் பரம்
பஸ்சாத் அஹம் யத் ஏதத் ச யோ அவசிஷ்யேத ஸோ அஸ்மி அஹம் (ஸ்ரீ.பா. 2.9.32)

ஆதியில் நான் மட்டுமே இருந்தேன். என்னைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. கடைசியில் எஞ்சி இருக்கப்போவதும் நானே.

ருதே அர்த்தம் யத் ப்ரதீயேத ந ப்ரதீயேத ச ஆத்மனி
தத் வித்யாத் ஆத்மனோ மாயாம் யதா ஆபாஸோ யதா தம:
( 2.9. 33)

பொருள் இல்லாத இடத்தில் இருப்பது போன்ற தோற்றமும் இருப்பது இல்லாதது போன்ற தோற்றமும் எனது மாயை என்று அறிக.

யதா மஹாந்தி பூதானி பூதேஷு உச்சாவசேஷு அனு
பிரவிஷ்டானி அப்ரவிஷ்டானி ததா தேஷு ந தேஷு அஹம்
(2.9. 34)

ஆகாசம் முதலிய பஞ்ச பூதங்கள் எப்படி எல்லாவற்றிலும் உட்புகுந்தாலும் அவைகளின் இயற்கையை இழப்பதில்லையோ அதுபோல நான் எல்லாவற்றிலும் இருந்தாலும் உண்மையில் அவை என்னிடம் உள்ளன நான் அவற்றில் இல்லை.

ஏதாவதேவ ஜிக்ஞாஸ்யம் தத்வ ஜிக்ஞாஸுனா ஆத்மன:
அன்வயவ்யதிரேகாப்யாம் யத் ஸ்யாத் ஸர்வத்ர ஸர்வதா

இதுதான் உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் ஆத்மதத்துவத்தை அறிய வேண்டுபவர் தெரிந்துகொள்ள வேண்டியதாகும்.
(2.9.35)

இந்த நான்கு ஸ்லோகங்களும் சதுச்லோகீ பாகவதம் எனப்படும். பகவானால் பிரம்மாவுக்கு உபதேசிக்கப்பட்ட இதுவே பாகவதம் என்னும் பெரிய மரத்தின் விதை போல் ஆயிற்று.
இதன் விளக்கம் பின்வருமாறு.

முதல் ஸ்லோகம்
இது உபநிஷத்தில் காணப்படும் வாக்கியத்தை ஒட்டி இருக்கிறது. ‘ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் .’ சத் அல்லது பிரம்மம்தான் முதலில் இருந்தது. அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. (சாந்தோ. உப. 6.2.1)
பிரம்மத்தைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதால் பகவானே உபாதான காரணமும் நிமித்த காரணமும் ஆகிறார். ( பானைக்கு மண் உபாதான காரணம் – குயவன் நிமித்த காரணம்)

இரண்டாவது ஸ்லோகம்.
இல்லாதது இருப்பதாகத் தோன்றுவது. .இதற்கு உதாரணம் கயிறைப் பார்த்து பாம்பு என்று நினைப்பது. இருப்பது இல்லாததாகத் தோன்றுவது என்னவென்றால் பாம்பு என்று நினைத்தால் அங்கு இருக்கும் கயிறு மறைந்து விடுகிறது அல்லவா?

இதை திருமூலர் எளிதாகச் சொல்லி இருக்கிறார் .
மரத்தில் மறைந்தது மாமத யானை
மரத்தை மறைத்தது மாமதயானை
பார்த்ததில் மறைந்தது பார் முதல் பூதம்
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
என்று.

இதன் விளக்கம் என்னவென்றால் ,
ஒரு யானை மரத்தில செய்தது. அதை ஒரு குழந்தை பார்த்து , ‘ஹாய் யானை ,’ என்கிறது. அதையே ஒரு தச்சன் பார்த்து நல்ல மரம் என்கிறான்.
யானையைப் பார்த்தால் மரம் தெரிவதில்லை . மரத்தைப் பார்க்கின் யானை தெரிவதில்லை.

அதேபோல பார் முதல் பூதம் என்பது பஞ்ச பூதங்களால் ஆன இந்த உலகம்.அதில் ஈடுபட்டால் இறைவனைக் காண்பதில்லை. இறைவன் உணர்வு வந்தால் இந்த உலகம் இல்லை.

அடுத்த ச்லோகம் அனுப்ரவேசம் . அதாவது எல்லாவற்றிற்குள்ளும் இருந்தாலும் இறைவன் அதைக்கடந்து நிற்கிறான். ஆகாசம் அங்கும் எல்லாவற்றிலும் இருக்கிறது. ஆனால் ஆகாசம் என்பது ஒன்றுதானே பல அல்லவே. இது பஞ்ச பூதங்களுக்கும் பொருந்தும்.

இதை எளிதாகப புரிந்து கொள்ள வேண்டுமானால் , ஒரு குடத்தின் உள் ஆகாசம் இருக்கிறது. குடத்தின் வெளியிலும் இருக்கிறது. அந்தக் குடத்தை உடைத்து விடுகிறோம். அப்போது அந்த ஆகாசம் எங்கு போயிற்று? குடம் போல்தான் எல்லா பஞ்சபூதங்களும் ஒரு வரையறைக்குட்பட்டன அல்ல.

கீதையில் இதையே
மத்ஸ்தானி சர்வபூதானி ந சாஹம் தேஷு அவஸ்தித: (ப.கீ. 9.4)
எல்லாம் என்னிடம் உள்ளன நான் அவைகளிடம் இல்லை என்று கூறுகிறார்.

நான்காவது ஸ்லோகத்தில் உண்மையை நேரிடையாகவும் எதிர்மறையாகவும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதன் அர்த்தம் , எது எங்கும் உள்ளதோ அதுதான் உண்மை. இது நேரிடையான வாதம். எது எங்கும் இல்லையோ அது உண்மை அல்ல. இது எதிர்மறையான வாதம். இது பாகவதத்தின் ஆரம்ப ஸ்லோகத்திலேயே கூறியுள்ளது.

“ஜன்மாத்யஸ்ய யத: அன்வயாத் இதரசஸ்ச அர்த்தேஷு அபிக்ஞ: ஸ்வராட்” (ஸ்ரீ. பா. 1.1.1.)
எதனிடமிருந்து ஜன்மாதி, அதாவது இந்த பிரபஞ்சத்தின் பிறப்பு முதலியவை (பிறப்பு, இருப்பு , அழிவு) ஏற்படுகிறதோ அதுதான் பிரம்மம். இந்த பிரம்மத்தை அன்வயம் மூலமும் வ்யதிரேகம் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

. அன்வயம் என்பது உடன்பாடு. பிரம்மமும் ஜீவனும் ஒன்று என்று கூறும் வேத வாக்கியங்கள் , சர்வம் கலு இதம் பிரம்ம , இவை எல்லாமே பிரம்மம் என்று கூறுபவை. வ்யதிரேகம் என்பது எதிர்மறை . பிரம்மம் இல்லாதது எதுவும் இல்லை என்பது.
பிரம்மா இதை தெரிந்துகொண்டபின் நாரதருக்கு உபதேசித்தார். பின்னர் நாரதரால் வியாசருக்கு உபதேசிக்கப்பட்டது.

ஸ்ரீமத் பாகவதம்-ஸ்கந்தம்2 அத்தியாயம் 10 Missing

Tags: , ,

Leave a comment